Latest News
Monday, April 23, 2018

மலையக 'விக்கிப்பீடியா'!

நம் மண்ணிண் அடையாளமான
சுப்பையா ராஜசேகரன்

ஓர் இனத்தை அழித்தொழிக்க வேண்டுமானால் அவ்வினத்துக்கு எதிராக போர்த்தொடுத்தாகவேண்டும் என்பது கட்டாயமில்லை. மொழி, கலை, கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழித்தாலேயே அவ்வினம் தானாகவே மாயமாகிவிடும். எனவே, ‘அடையாள மறைப்பு’ என்ற ஆயுதமானது அணுகுண்டைவிட பலமடங்கு ஆபத்தானது என்பதை நாம் கட்டாயம் அறிந்துவைத்திருக்கவேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயுதமேந்தி போராடுபவன் மட்டுமல்ல, அவ்வினத்தின் கலை, கலாசாரம், பாரம்பரியம், அடையாளம் ஆகியன அழியாமல் இருக்கவேண்டுமென்பதற்காக எழுத்தாயுதம்மூலம் உயிர்கொடுப்பவனும் உண்மையான போராளியாவான் என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களையும் ஓர் தேசின இனமாக அங்கீகரித்து அவர்களுக்கும் அரசியல் உரிமைகள் வழங்குமாறு எம்மக்கள் பலவருடங்களாக போராடிவருகின்றனர். இந்த கோரிக்கை நியாயபூர்மானதே என்பதை உறுதிப்படுத்துவதற்காக எமக்கான அடையாளங்களை ( கடந்துவந்த தடங்களை) ஆவணமாக சேமித்து வைத்துள்ளார் நம் சுப்பையா ராஜசேகரன். suppaiah rajasegaran
இவரின் புகழும், மலையகசமூகத்துக்காக இவர் ஆற்றிவரும் சேவைகளும் காலத்தில் அழியாதவையாக இருக்கவேண்டும். இதன்காரணமாகவே சுப்பையா ராஜசேகரன் பற்றி பதிவிடுகின்றது ‘பச்சை தங்கம்’.
1950 ஆம் ஆண்டு நுவரெலியா, ஹட்டன், வட்டகொடையில் பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை ஹட்டன், கொன்வன்ட் கல்லூரியில் பயின்றார். ( மேற்படி பாடசாலை ஆரம்பத்தில் கலவன் பாடசாலையாகவே இருந்தது) அதன்பிறகு தோட்டபாடசாலையில் பாதமெடுத்துவைத்த அவர், உயர்கல்வியை ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நிறைவுசெய்தார்.

சிறுவர் பராயத்திலிருந்தே தமிழ்மீதும், மலையக சமூகம்மீதும் அளவற்ற பற்றுவைத்திருந்தார். கவிதை எழுதுதல், பேச்சு மற்றும் விவாதப் போட்டிகளில் பங்கேற்று மலைநாட்டின் அருமை, பெருமையெல்லாம் உச்சம்தொட வைத்தாரென்றெ கூறவேண்டும்.
அதுமட்டுமல்ல வீதி நாடகங்கள், மேடை நாடகங்களின் ஊடாக சமூகவிழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து மலையகம் எழுச்சிகாணவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். 1967 ஆம் ஆண்டு விஜயபாரதி இலங்கை வந்திருந்போது, சிறந்த பேச்சாளருக்கான விருதை அவர் கையால் பெற்றுள்ளார்.
ராஜசேகரனுக்குள் புதைந்திருந்த திறமைகளை தட்டியெழுப்பிய திருந்செந்தூரன், சிவலிங்கம் போன்ற ஆசிரியர்கள், அவரை மேலும் செம்மைப்படுத்தினர் என கூறினால் அது மிகையாகாது.
இவ்வாறு தனது வாழ்வில் ஒரு பகுதியை எம் சமூகத்தின் கலை, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்காகவே அர்ப்பணித்த இவர், பல மாணவர்களுக்கு கல்வி அமுதூட்டியுள்ளார்.
தோட்டப்பகுதிகளில் அந்தகாலத்தில் மாலைநேர வகுப்புகள் நடைபெறும். வட்டகொடை, மடக்கும்பரை ஆகிய பகுதிகளிலுள்ள பல மாணவர்கள் இவரிடம் பயின்றுள்ளனர். எழுத்தறிவித்தவன் இறைவனாவான். எனவே, இவரிடம் பயின்ற மாணவர்கள் அவரை இறைவனாகவே பார்க்கின்றனர்.

ஐம்பவது வயது தாண்டிவிட்டாலேயே முதுமை என்ற மாயைக்குள் மூழ்கி பலர் முடங்கிவிடுவார்கள். ஆனால், இவர் அப்படிபட்டவர் அல்லர். யுகத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளக்கூடியவர். இதனால்தான் பேஸ்புக் ஊடாக மலையகத்தின் புகழை பரப்பிவருகிறார். ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்ற தலைப்பின்கீழ் இவர் இடம் பதிவுகள் எம் சமூகம் கடந்துவந்த பாதையாகும். அவற்றை மீட்டிப்பார்ப்பதற்குரிய பெரும் வரத்தை எமக்கு தந்துள்ளார் என கூறினால் அது மிகையாகாது.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர், மலையக விக்கிபிடியா, நடமாடும் தகவல் களஞ்சியசாலை என்றெல்லாம் எம்மவர்களால் போற்றப்படுகின்றார். இவரின் மனைவி கம்பளை, கோணடிக்கா தோட்டத்தை சேர்ந்தவர்.
மலையக தாய் பெற்றறெடுத்த தவப்புதல்வனே, உன் பணி மேலும் தொடரவேண்டும். எம் மலையகத்தின் குரலை நீ விண்ணதிர முழங்கவைக்க வேண்டும் எனகோரி வாழ்த்து மழைபொழிகின்றது ‘பச்சை தங்கம்’
எஸ். பிறை
- பச்சை தங்கம்-
  • Like us
  • Comments
Item Reviewed: மலையக 'விக்கிப்பீடியா'! Rating: 5 Reviewed By: pachai thangam