Latest News
Wednesday, October 9, 2019

மலையகத்தில் கிளி ஜோசியம்!


இயற்கை எழில் கொஞ்சும் மலையக மண்ணிலே துள்ளிக்குதித்து கிளிதட்டு, பிள்ளையார் பந்து, கிரிக்கெட் என நாள்தோறும் விதவிதமாக விளையாடி இன்பக் கடலுக்குள் மூழ்கி, துன்பங்களை மறந்து மகிழ்ச்சிபொங்க சிறகடித்தவாறே சிறார் பருவத்துக்கு விடைகொடுத்தோம்.
ஆனால் இன்று………! தொழில் நிமிர்த்தம் நகரம் என்ற கட்டடக் காட்டுக்குள்ளேயே எம்மில் பலரது வாழ்வு வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது. சிலருக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே தோட்டங்களுக்கு வந்து செல்வதற்குரிய வரம் கிடைக்கிறது.
இப்படி நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தோட்டப்பகுதியை நோக்கி மனம் அலை பாய்கையில் – அந்த காலத்தில் அரங்கேறிய சம்பவங்களெல்லாம் மனத்திரைக்குள் எம்மை அறியாமலேயே ஆனந்த தாண்டவமாடும்.
அந்த வரிசையில் ‘கிளி ஜோசியம்’ குறித்த அனுபவத்தை பதிவிடலாம் என நினைக்கின்றேன்.
லயத்துக் குருவிகளையும், கோழிகளையும் எந்நேரத்தில் வேண்டுமானாலும் கண்டு மகிழலாம். ஆனால் பச்சைக் கிளிகளை காண்பதென்பது அரிதிலும் அரிது என்றே கூறலாம்.
10 ஆம் திகதி சம்பளம் வழங்கப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களுக்கு பணப்புழக்கம் லக்‌ஷ்மி கரமாகவே இருக்கும். இக்காலப்பகுதியில்தான் கிளி ஜோசியரும் எங்கள் தோட்டத்துக்கு வருவார்.
கையிலே ஒரு கூடு, பின் கழுத்து பகுதியில் குடை தொங்கும்.  தலைப்பாகை கட்டி வருவதுதான் அவரின் தனித்துவமே. ( ஐயாவின் பெயர் தெரியாது, கேட்டதும் இல்லை. ஆனால், முல்லோயா பகுதியிலிருந்துதே வருவார் என தெரிவிக்கப்பட்டது.)
ஒவ்வொரு லயமாகவந்து கிளி ஜோசியம்………, கிளி ஜோசியம்……. என கூவி அழைப்பார். அவர் தோட்டத்துக்கு வந்தமே சிறார்களெல்லாம் அவர் பின்னாலேயே அணிவகுத்து செல்வார்கள் ( கிளியை நேரில் காண்பதில் அத்தனை ஆனந்தம்.)
கோடி பக்கத்தில் வைத்தே கிளிஜோசியம் வாசிக்கப்படும். முதலில் ‘ரபர் சீட்’ அல்லது துணியொன்று விரிக்கப்படும். அதன்மீது கிளிக்கூடு வைக்கப்படும். ( ஒரு சிலர் கிளிகூடு வைக்கப்படும் இடத்தை மஞ்சல் கலந்த நீரை ஊற்றி சுத்தம் செய்வதையும் கண்டுள்ளேன்.)
( அவ்வேளையில் சிறார்களாகிய எமது ஒட்டுமொத்த பார்வையும் கிளிக்கூடுமீதே செலுத்தப்படும். தலையை சற்று முன்நோக்கி கொண்டு சென்றால், ‘ எல்லாம் பின்னுக்கு போங்க’ என்ற உத்தரவு ஐயாவிடமிருந்து ஆவேசமாக வரும்.)
ஜோசியம் பார்க்க விரும்பும் நபர் கிளிக்கூடுக்கு முன்னே செல்லவேண்டும். கூட்டுக்கு முன்னால் இரு வரிசைகளில் குறிப்பு அட்டைகள் (கிளி சீட்டு) அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
சிறிய புத்தகம்போன்ற அந்த சீட்டின் வடிவமைப்பு இருக்கும். ஒரு புறத்தில் இஷ்ட தெய்வங்களின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் குறிப்பு எழுதப்பட்டிருக்கும்.
பெயர் என்னவென கேப்பார். பெயரை குறிப்பிட்டதும், ( சிங்காரி என வைத்துக்கொள்வோம்.)
“வாம்மா ………..வந்து சிங்காரிக்கு ஒரு சீட்ட எடு’ எனக் கூறியபடியே கிளிக் கூட்டின் கதவை திறப்பார்.
கிளியும் வெளியே வந்து (உடனே சீட்டை எடுக்காது) தனது அலகால் ஒவ்வொரு சீட்டாக எடுத்து கீழேபோட்டு, ஏதாவது ஒன்றை எடுத்துக்கொடுக்கும்.
அந்த சீட்டில் எழுதப்பட்டிருப்பதை கிளி ஜோசியர், பாடல் பாணியில் வாசிப்பார். ( இப்பதிவை எழுதும்போதுகூட அந்த குரல் செவிகளுக்குள் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றது.)
அதில் நல்ல தகவல் வந்திருந்தால் மகிழ்ச்சி. ஏதாவது கெட்ட சகுணம் இருப்பின், அது தொடர்பில் ஆரூடம் கூறப்பட்டால் அதற்கான பரிகாரங்களும் ஆலோசனையாக முன்வைக்கப்படும்.
( 1997 களில் 20 முதல் 50 ரூபாவரை அறிவிடப்பட்டது.)   தோட்டத்திலுள்ள மரத்திலிருந்தே கொய்யா பழம் பிடுங்கப்பட்டு அது கிளிக்கு உணவாக வழங்கப்படும். )
ஆனால் இன்று பெரும்பாலான தோட்டங்களில் கிளிஜோசியம் பார்க்கும் பழக்கம் – அந்த பாரம்பரிய நம்பிக்கை அரிதாகிவிட்டது அல்லது முழுமையாக கைவிடப்பட்டுள்ளது எனக் கூறலாம்.
கிளியைப்பிடித்து ஜோசியத்துக்கு ஏற்றவகையில் அதை பழக்கும் கலையை கற்ற ஒரு சிலர் மட்டுமே தற்போது மலையகத்தில் வாழ்கின்றனர். புதிய தலைமுறை இதை விரும்புவதில்லை. காலப்போக்கில் கிளிஜோசியமும் காணாமல்போன பட்டியலில் இணையக்கூடும்.
கிளி ஜோசியமாவது, புலி ஜோசியமாவது, எல்லாமே மூட நம்பிக்கைதான். இவை அழியவேண்டும் என கருத்து கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
( உங்களின் அனுபவங்களையும் பகிருங்கள். ஹட்டனிலுள்ள கிளி ஜோசியர் ஒருவரின் படமே இது. சுசி என்ற நண்பரே எடுத்து அனுப்பினார்.)
  • Like us
  • Comments
Item Reviewed: மலையகத்தில் கிளி ஜோசியம்! Rating: 5 Reviewed By: pachai thangam