1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களுடன் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
18 ஆசனங்களைக் கைப்பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானது. கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஒக்டோபர் 24வரை பதவியில் நீடித்தார். 1989 ஜீலை 13 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.இலங்கை பாராளுமன்றத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு இன்னமும் அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருமுனைப்போட்டி நிலவுவதால் கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்தது.
எனினும், இந்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், ஐ.தே.க. தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என்றும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி (03.12.2019) கூடும்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்தான அறிவிப்பை , சபாநாயகர் கரு ஜயசூரிய அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக கலாநிதி என்.எம். பெரேராவே பதவி வகித்துள்ளார். 1947 முதல் 2018 வரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தவர்களின் விபரம் வருமாறு-
1.கலாநிதி என்.எம். பெரேரா. – 1947 ஒக்டோபர் 17 – 1952 ஏப்ரல் 08
1935 டிசம்பர் 18 ஆம் திகதி உதயமான லங்கா சமசமாஜக் கட்சியில் உயர்பதவியை வகித்த கலாநிதி என்.எம். பெரேரா 1947 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் றுவன்வெல்ல தொகுதியில் போட்டியிட்டு 10 ஆயிரத்து 65 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
இலங்கையில் முதலாவதாக கட்சி அடிப்படையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். எந்தவொரு கட்சியும் 50 சதவீத ஆசனத்தைக் கைப்பற்றவில்லை.
எனவே, 42 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சை உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தது. தமிழ்க் காங்கிரசும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களை வென்றது. இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக என்.எம். பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
முதலாவது பாராளுமன்ற அமர்வு 1947 ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெற்றது. அன்று முதல் 1952 ஏப்ரல் 8 ஆம் திகதிவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டார்.
2.எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க – 1952 ஜுன் 09 – 1956 பெப்ரவரி 18
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த பண்டாரநாயக்க அக்கட்சியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 1951 இல் வெளியேறி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார்.
1952 மேயில் நடைபெற்ற இலங்கையின் 2 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட்டது.
தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றாலும் அத்தனகல தொகுதியில் 38 ஆயிரத்து 478 வாக்குகளைப்பெற்று பண்டாரநாயக்கவே முதலிடம் பெற்றார்.
அத்துடன், மொத்தமாக 9 தொகுதிகளில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும் அக்கட்சிக்கு கிடைத்தது. 1956 பெப்ரவரி 18 ஆம் திகதிவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடித்தார்.
1959 செப்டம்பர் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
3.கலாநிதி என்.எம். பெரேரா – 1956 ஏப்ரல் 19 – 1959 டிசம்பர் 05
1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3 ஆவது பொதுத்தேர்தலில் 51 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரியணையேறியது.
ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 14 ஆசனங்களைக் கைப்பற்றிய லங்கா சமசமாஜக்கட்சி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியானது.
1956 ஏப்ரல் 19 ஆம் திகதி கலாநிதி என்.எம். பெரேரா 2ஆவது முறையும் எதிர்க்கட்சித் தலைவராக கடமையேற்றார்.
பண்டாரநாயக்க அரசின் தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் லங்கா சமசமாஜக்கட்சி போர்க்கொடி தூக்கியது.
1959 டிசம்பர் 5 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார். அதன்பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கவில்லை.
லங்கா சமமாஜக்கட்சி 1964 இல் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்கியது. 70 இல் இக்கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் என்.எம். பெரேரா நிதி அமைச்சராக பதவி வகித்தார்.
1979 ஆகஸ்ட் 4 ஆம் திகதி உயிரிழந்தார்.
4.சீ.பி.டி. சில்வா 1960 மார்ச் 30 – 1960 ஏப்ரல் 23
1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 4 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல்போனது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு சீ.பி.டி.சில்வாவே தலைமை தாங்கினார்.
50 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தாலும், சிம்மாசன உரையின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.
இதனால் தேர்தல் நடைபெற்று 24 நாட்களுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி 1960 ஜீலை 20 ஆம் திகதி இலங்கையில் ஐந்தாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.
5.டட்லி சேனாநாயக்க- 1960 ஒகஸ்ட் 05 – 1964 டிசம்பர் 17
1960 ஜீலை 20 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
30 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி பிரதான எதிர்க்கட்சியானது.
அதன் தலைவர் டட்லி சேனாநாயக்க 1960 ஒகஸ்ட் 05 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராக கடமையேற்றார். 1964 டிசம்பர் 17 ஆம்திகதிவரை பதவியில் நீடித்தார்.
1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். ஒரு தடவை மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான டி.எஸ். சேனாநாயக்கவின் புதல்வரான இவர், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் கல்வி பயின்றுள்ளார்.
1973 ஏப்ரல் 13 ஆம் திகதி உயிரிழந்தார்.
6.சிறிமாவோ பண்டாரநாயக்க- 1965 ஏப்ரல் 05 – 1970 மார்ச் 25
தனது கணவரான எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், அரசியலுக்கு காலடியெடுத்து வைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் பதவியை ஏற்று உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற நாமத்தை பெற்றார்.
எனினும், 1965 மார்ச் 22 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. 41 ஆசனங்களை கைப்பற்றிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஶ்ரீமா எதிர்க்கட்சித் தலைவரானார்.
1965 இல் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய முன்னணியை (சமகி பெரமுண) உருவாக்கினார். எதிர்க்கட்சித் தலைவருக்கான கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றினார்.
இதனால் 1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. ஶ்ரீமா பிரதமரானார்.
இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு இவர் தலைமையிலேயே உருவாக்கப்பட்டது. 1976 இல் கொழும்பில் அணிசேரா மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தினார்.
7.ஜே.ஆர்.ஜயவர்தன- 1970 ஆகஸ்ட் 07 – 1977 மே 18
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றது. 17 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஜெ.ஆர். ஜயவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
சிறந்த கல்வியாளரான ஜே.ஆர்.ஜயவர்தன டி.எஸ். சேனாநாயக்கவின் வழிகாட்டலில் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர். 1947 இல் முதலாவது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்.
1973 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை இவர் ஏற்ற பின்னரே அசுர வேகத்தில் கட்சி வளர்ச்சி கண்டது.
குறிப்பாக 1977 ஜீலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐ.தே.க. மீண்டும் அரியணையேறியது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைபலம் இருந்ததால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கி, 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இவரே. 1982 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிநடைபோட்டார்.
அதன்பின்னர் 1982 டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொண்டார்.
இலங்கை அரசியலில் இன்றளவிலும் பேசப்படுகின்ற ஓர் அரசியல் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தன விளங்குகிறார். 1996 நவம்பர் முதலாம் திகதி உயிரிழந்தார்.
8.அ.அமிர்தலிங்கம் – 1977 ஆகஸ்ட் 04 – 1983 ஒக்டோபர் 24
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களுடன் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
18 ஆசனங்களைக் கைப்பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானது. கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஒக்டோபர் 24வரை பதவியில் நீடித்தார். 1989 ஜீலை 13 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
9.அநுர பண்டாரநாயக்க – 1983 நவம்பர் 08 – 1988 டிசம்பர் 20
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தைவிட்டு வெளியேறியதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக்கட்சி வசமானது.
ஶ்ரீமாவோ பண்டார நாயக்கவின் மகனான அநுர பண்டாரநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியையும் இவர் வகித்துள்ளார்.2008 மார்ச் 16 ஆம் திகதி தனது 59 ஆவது வயதில் காலமானார்.
10.ஶ்ரீமாவே பண்டாரநாயக்க – 1989 மார்ச் 09 –1994 ஜுன் 24
77 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜே.ஆர். அரசாங்கம் ஶ்ரீமாவின் குடியுரிமையை பறித்ததால் அவரால் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
1988 டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 2ஆவது ஜனாதிபதி தேர்தலில் அவர் ஶ்ரீமா போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றிபெறமுடியாமல்போனது.
சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்ற ஆயுட்காலமும் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.
67 ஆசனங்களைக் கைப்பற்றிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அதன் தலைவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1994 ஜீன் 24 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.
11.காமினி திஸாநாயக்க – 1994 ஆகஸ்ட் 25 –1994 ஒக்டோபர் 24
1994 ஆகஸட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
94 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா வெற்றிபெற்ற பின்னர் ஶ்ரீமா பிரதமரானார்.
இரண்டு தடவைகள் மட்டுமே அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துள்ளார்.2000 ஒக்டோபர் 10 ஆம் திகதி காலமானார்.
1994 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.
1994 நவம்பர் 09 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் காமினி திஸாநாயக்க போட்டியிட்டார்.
1994 ஒக்டோபர் 20 ஆம் திகதி எவரும் எதிர்பாராத வகையில் கொழும்பு, தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது படுகொலை செய்யப்பட்டார் காமினி திஸாநாயக்க.
இதனால் அவரின் பாரியாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது.
12.ரணில் விக்கிரமசிங்க – 1994 ஒக்டோபர் 28 –2000 ஆகஸ்ட் 18
காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், எதிர்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
2000 ஆகஸ்ட் 18 பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை அப்பதவியில் நீடித்தார்.
சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு – 2000 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் திருப்திகரமான வெற்றியை வழங்கவில்லை.
இத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 94 ஆசனங்களைக் கைப்பற்றி 13 போனஸ் ஆசனங்கள் சகிதம் மொத்தமாக 107 ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான சாதாரணப்பெரும்பான்மை பலம் (113) இருக்கவில்லை.
மறுபுறத்தில் உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி, ஆட்சிகவிழ்ப்பு திட்டம் என பல பிரச்சினைகள் தலைதூக்கியதால் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி – ஓராண்டுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சந்திரிக்கா.
2000 செப்டம்பர் 14 முதல் 2000 ஒக்டோபர் 10 வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ரணில் நீடித்தார்.
13.ரத்னசிறி விக்கிரமநாயக்க – 2001 டிசம்பர் 18 –2002 ஜனவரி 31
2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 77 ஆசனங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சித் தலைவராக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போதைய பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் விதுல விக்கிரமநாயக்கவின் தந்தையாவார்.
2016 டிசம்பர் 27 ஆம் திகதி இவர் உயிரிழந்தார்.
14.மஹிந்த ராஜபக்ச – 2002 பெப்ரவரி 06 –2004 பெப்ரவரி 07
15.ரணில் விக்கிரமசிங்க – 2004 ஏப்ரல் 22 – 2010 பெப்ரவரி 09
16.ரணில் விக்கிரமசிங்க – 2010 ஏப்ரல் 22 – 2015 ஜனவரி 09
17.நிமல் சிறிபாலடி சில்வா. 2015 ஜனவரி 20 – 2016 ஜீன் 26
2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
ஜனாதிபதியாக பதவியேற்றகையோடு, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நியமித்ததால், மஹிந்த தலைமையிலான அரசாங்கமும் கவிழ்ந்தது. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் இடைக்கால அரசாங்கம் பதவியேற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர் நிமல்சிறிபாலடி சில்வா 2015 ஜனவரி 20 ஆம் திகதி முதல் 2016 ஜீன் 26வரை பதவி வகித்தார்.
18.சம்பந்தன் – 2015 செப்டம்பர் 03 – 2018 டிசம்பர் 17
2015 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை.
போனஸ் ஆசனங்கள் சகிதம் 106 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியது.
சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு மஹிந்த தரப்பு கட்டுப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வேண்டும் என வலியுறுத்தியது – வாதிட்டது.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அம்முன்னணியின் உறுப்பினர்களுக்கு வழங்கமுடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதன்படி 16 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். பிரதம எதிர்க்கட்சி கொறடா பதவி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது
19.மஹிந்த ராஜபக்ச – 2018 டிசம்பர் 18 2019 நவம்பர் 21
2018 ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது, தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்பின்னர் பிரதமராக மஹிந்தவை ஜனாதிபதி நியமித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தார்.
எனினும், அவரின் முடிவு சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த கடமையேற்றார். 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அதுவரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மஹிந்த நீடித்தார்.
இந்நிலையிலேயே இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச கடமையேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆர்.சனத்
தகவல்மூலம் –
பாராளுமன்ற இணையத்தளம்.
தேர்தல் ஆணைக்குழு இணையத்தளம்.