Latest News
Sunday, November 24, 2019

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் -1947

இலங்கையில் ஆரம்பத்தில் முடியாட்சியே (மன்னராட்சி) நிலவியது. காலனித்துவ ஆட்சிகாலத்தில்தான் நிர்வாக மற்றும் அரசாங்க கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அந்தவகையில் 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரை மூலம் இலங்கையர்களுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றது.
2ஆவது அரசுப் பேரவைக்கான தேர்தல் 1936 பெப்ரவரி 22 திகதி முதல் மார்ச் 07 ஆம் திகதிவரை 11 நாட்கள் நடைபெற்றது.
குறிப்பாக 1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1947 இல்தான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.
முதலாவது பொதுத்தேர்தல்
அந்தவகையில் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 ஆகஸ்ட் 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்றது.
சுதந்திரப்போராட்டத்துக்கு அரசியல் ரீதியில் தலைமைத்துவம் கொடுத்த டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, என்.எம். பெரேரா தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிற்கட்சி, போல்ஷேவிக் லெனின் கட்சி, கம்யூனிஸ் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் ஆகியன தேர்தலில் களமிறங்கின.
1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அங்கம் வகித்தார். அத்தனகல தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சிங்கள மகா சபை, அகில இலங்கை சோனகர் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் லீக் என்பன ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அங்கம் வகித்தன.
95 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகளிலிருந்தும் சுயேட்சைக்குழுக்களிலிருந்து 361 பேர் 89 தொகுதிகளில் போட்டியிட்டனர்.வாக்களிப்பதற்காக 30 இலட்சத்து 48 ஆயிரத்து 145 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
எனினும், 56.10 சதவீத வாகுபதிவே இடம்பெற்றுள்ளது. ( விக்கிபீடியா)
ஐக்கிய தேசியக்கட்சி 42 ஆசனங்களையும், லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை இந்திய காங்கிரஸ் 6 ஆசனங்களையும் போல்ஷேவிக் லெனின் கட்சி 5 ஆசனங்களையும் வெற்றிபெற்றன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 6 ஆசனங்களையும் இலங்கை தொழில் கட்சி ஒரு ஆசனத்தையும், சுயேச்சை 21 ஆசனங்களையும் கைப்பற்றின. நியமனம்மூலம் 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்படி முதலாவது பாராளுமன்றத்தில் 106 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.
இலங்கையில் முதலாவதாக கட்சி அடிப்படையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். எந்தவொரு கட்சியும் 50 சதவீத ஆசனத்தைக் கைப்பற்றவில்லை.
எனவே, சுயேட்சை உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தது.தமிழ்க் காங்கிரசும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
முதலாவது பாராளுமன்ற அமர்வு 1947 ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெற்றது.
1947 இல் சோல்பரி யாப்பின் பிரகாரமே இலங்கையில் அமைச்சரவை (கெபினட்) அறிமுகப்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற ஆட்சிதுறையில் அமைச்சரவையே நிறைவேற்று துறையாக காணப்பட்டது. அமைச்சரவையின் தலைவராக பிரதமரே செயற்படுவார்.
அவரின் ஆலோசனையின் பிரகாரமே அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
(1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்படும்வரை இந்நிலைமை நீடித்தது.)
டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான அமைச்சரவையில் 16 உறுப்பினர்கள் இடம்பிடித்தனர்.
1947 செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் 1952 மார்ச் 22 வரை டி.எஸ். சேனாநாயக்க பிரதமராக பதவி வகித்தார்.
பாராளுமன்ற பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அவரின் மகனான டட்லி சேனாநாயக்க 1952 மார்ச் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில்
மலையக பிரதிநிதித்துவம்……
1.சௌமியமூர்த்தி தொண்டமான் – 9,386
நுவரெலியா தொகுதி.
2.சீ.வி. வேலுபிள்ளை – 10,645
தலவாக்கலை தொகுதி.
3.கே. குமாரவேலு – 6,722
கொட்டகலை தொகுதி.
4.ஜீ.ஆர்.மோத்தா – 9,086
மஸ்கெலியா தேர்தல் தொகுதி.
5.கே. இராஜலிங்கம் – 7,933
நாவலப்பிட்டிய தொகுதி.
6.எஸ்.எம். சுப்பையா – 27,121
பதுளை தொகுதி.
சோல்பரியாப்பு
சோல்பரி யாப்பின் ஊடாக இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. நியமன உறுப்பினர்கள், செனட் சபையில் சிறுபான்மையின பிரதிநிதித்துவம் என அந்தப்பட்டியல் நீள்கிறது.
1947, 1952, 1956 களில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக இருந்தது.
1960 நடைபெற்ற பொதுத்தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரிக்கப்பட்டது. நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக நீடித்தது.
அத்துடன், சொல்பரி யாப்பின்கீழ் இரண்டாம் சபையென கருதப்படுகின்ற செனட் சபையும் உருவாக்கப்பட்டது. 30 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். இதில் மூன்றிரொரு பங்காவது சிறுபான்மையின பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
சோல்பரி யாப்பு இலங்கைக்கு திணிக்கப்பட்டது என்றும், அதில் மேலும் பல குறைப்பாடுகள் இருக்கின்றது என கருதியும் 1972 இல் முதலாம் குடியரசு யாப்பு அறியமுகப்படுத்தப்பட்டது.
1972 முதல் 78வரை இதுவே நீடித்தது. 78 இல் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. இதுவே தற்போதும் இலங்கையின் அரசியலமைப்பாக அமுலில் உள்ளது.
சுதந்திரம் 
இலங்கைக்கு சுதந்தரம் வேண்டுமென சிங்களம், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அறவழியில் போராடினர். இதனையடுத்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்தது.
இதற்காக 1947 இல் டி.எஸ். சேனாநாயக்க அரசாங்கத்துடன் பாதுகாப்பு உட்பட சில ஒப்பந்தங்களில் அந்நாடு கைச்சாத்திட்டது. இதன்படி சுதந்திரச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.  இருநாட்டு நாடாளுமன்றங்களிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி முதல் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடு அல்ல என்றும்,
இலங்கை தொடர்பாகப் பிரித்தானியப் பாராளுமன்றம் பெற்றிருந்த
ஆணையிடும்,சட்டங்களைப் பிறப்பிக்கும் அதிகாரங்கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது.
அதாவது இலங்கையில் முதலாவது பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே சுதந்திர இலங்கைக்கான சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆர்.சனத்
தகவல்மூலங்கள்
தேர்தல் ஆணைக்குழு இணையம்
பாராளுமன்ற இணையம்
விக்கிபீடியா
  • Like us
  • Comments
Item Reviewed: இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் -1947 Rating: 5 Reviewed By: pachai thangam