Latest News
Monday, May 7, 2018

வலி சுமந்த கந்தலோயா !

பாடசாலையின் வெளித்தோற்றம்....
சமூகமாற்றம் குறித்தும், விடுதலை தொடர்பிலும் விண்ணதிர கோஷங்கள் எழுப்பட்டாலும் அவற்றை அடைவதற்குரிய – அறவழியிலான வழிமுறை - பொறிமுறை சம்பந்தமாக பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நுட்பத்தை எம் ஆறாம் அறிவு கிரகிக்குமானால் ‘மாற்றம்’ என்பது வெகுதொலைவில் இல்லையென்றே கூறவேண்டும்.
கல்விப் புரட்சியே நிலையானதொரு சமூகமறுமலர்ச்சி வழிவகுக்கும். ஆயிரம் ஏவுகணைகள் அணிவகுத்துஏவினால்கூட எட்டமுடியாத இலக்கை இலகுவில் தொட்டுவிடும் வல்லமை ‘கல்வி’ என்ற ஆயுதத்துக்கே இருக்கின்றது என கூறினால் அது மிகையாகாது. ஏட்டுக்கல்வியூடாக மாத்திரம் இதைசெய்துவிடமுடியாது. சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்து இலக்கை அடைவது பற்றியும் கட்டாயம் கற்று அறியவேண்டும்.
200 ஆண்டுகளாக அடிமை – அடக்குமுறை- புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடமுடியாமல், விடுதலைக்காக வழிமீது விழிவைத்துக்காத்திருக்கின்றது நம் மலையக சமூகம். விடியலை நோக்கி நகர கல்வியே எமக்கும் எஞ்சியிருக்கும் இறுதி அஸ்திரமாகும். ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள், சமூகநலன் விரும்பிகள் ஆகிய நான்கு தரப்பும் ஓரணியில் திரண்டால்தான் இது சாத்தியமாகும்.

மேற்படி நான்கு சக்திகளும் ஓரணியில் திரண்டு குறைந்த வளங்களுக்கு மத்தியிலும் தியாகம் - அர்ப்பணிப்பு- விட்டுக்கொடுப்பு ஆகிய அம்சங்களுடன் முன்நோக்கி நகரத்துடிப்பதை கந்தலோயாவில் காணும்வரம் ‘பச்சை தங்கம்’ குழுவினருக்கு கிடைத்தது.
பாடசாலையாக இயங்கிய தொழிற்சாலை

‘மாற்றம்’ என்பது விண்ணிலிருந்து விழாது: தங்கத்தட்டில் வைத்து எவரும் தரப்போவதுமில்லை. அதை நோக்கி நாம்தான் பயணிக்கவேண்டும். இந்த சிந்தனை எம் அனைவரது மனங்களிலும் உதயமாகவேண்டும் என்பதால்தான் கந்தலோயா தமிழ் வித்தியாலயம் தொடர்பில் பதிவிடுகின்றோம்.

( கடந்த காலத்தை உங்கள் விழித்திரைகளுக்கு முன்னால் கொண்டுவருவதுபோல் - மலையகத்தின் எதிர்காலம் பற்றியும் பேசவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. தற்புகழுக்காகஅன்றி மாற்றத்துக்காக ஏங்கும் ஒரு ஊரை மேலும் உற்சாகப்படுத்துவதே பதிவின் நோக்கம்.)
மலையகத்தின் நுழைவாயிலாக கருதப்படுகின்ற சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை நிர்வாக மாட்டத்துக்குட்பட்ட பகுதியிலேயே கந்தலோயா அமைந்திருக்கின்றது. எழில்கொஞ்சும் மலைநாட்டுக்கேவுரிய அனைத்து அம்சங்களையும் அது கொண்டுள்ளது.
கீழ்ப்பிரிவு, மேல்பிரிவு ( மேமலைதோட்டம்) என கந்தலோயாவில் இருபிரிவுகள் இருக்கின்றன. கீழ்ப்பிரிவிலேயே 160 குடும்பங்கள் வாழ்கின்றன. மேல் பிரிவில் குறைந்தளவானவர்களே வசிக்கின்றனர். 1916 ஆம் ஆண்டளவிலேயே கந்தலோயோ தமிழ் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1980 இல் அரசாங்கம் பொறுப்பேற்றது. ஆரம்பத்தில் எவ்வித வசதிகளுமே இருக்கவில்லை. பாழடைந்த தொழிற்சாலையொன்றே வகுப்பறையாக உருமாறியது. அதிபர் ஒருவர் மாத்திரமே அப்பாடசாலையில் பணிக்கு அமர்த்தப்படுவார். 2006 ஆம் ஆண்டுவரை அந்த அவலம் நீடித்தது. மனிதவளமும், பௌதீக வளமும் போதுமானவையாக இருக்கவில்லை. இதனால், கல்வி வளர்ச்சியென்பது ஆமைவேகத்திலேயே நகர்ந்தது.
மாணவர்களும் கல்வியை பாதியிலேயே விட்டோடும் நிலையும் ஏற்பட்டது.

2006 இல் அரச கட்டமொன்று நிர்மாணிக்கப்பட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன், அதிபர், மேலும் இரு ஆசிரியர்கள் உட்பட மொத்தமாக மூவர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தற்போதைய அதிபர் கருணாகரன், மாணவர்களை ஒன்றுதிரட்டி, பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெரும் திரும்புமுனையை ஏற்படுத்தினார். ஆசிரியர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வலுத்தாலும், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டியதால் ‘கல்வி’மீது பெற்றோரின் பார்வையும் திரும்பியது. அன்று முதல் இன்றுவரை தம்மாலான அனைத்து உதவிகளையும் அவர்கள் வழங்கிவருகின்றனர். பொருளாதாரப் பிரச்சினையிருந்தாலும் கல்விக்கான ஒதுக்கீட்டை ஒருபோதும் அவர்கள் கைவிடுவதில்லை.
மறுபுறத்தில் மாணவர்களும் சிந்திக்கதொடங்கினர். ஆசிரியர்களும் தோள்கொடுக்க 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப்போட்டியில் 3ஆம் இடம் இப்பாடசாலைக்கு கிடைத்தது ( சமூகநாடகம்) . அதன்பிறகு வரலாற்றில் முதன்முறையாக மாணவரொருவர் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு தேசிய மட்டத்திலான கனி~;ட கணித நாடகப் பிரிவிலும் முதலாமிடத்தை இப்பாடசாலை முத்தமிட்டது.
ஏட்டுக்கல்வியாக மட்டும் கல்வியை மட்டுப்படுத்தாது, தலைமைத்துவப் பயிற்சி, செயன்முறைக் கல்வி, விழிப்புணர்வு, தொழில்நுட்பம், சினிமா, உளவியல் ஆலோசனைகள் என அனைத்து விழிமுறைகளையும் கையாண்டு மாணவர்களுக்கு கல்வி அமுதூட்டப்பட்டுவருகின்றது. 2013ஆம் ஆண்டு சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டது. ஓ.எல். பரீட்சைக்கு தோற்றிய 11 மாணவர்களில் 9 பேர் உயர்தரம் தகுதிப்பெற்றனர். ஏனைய இருவரின் பெறுபேறுகளும் பாராட்டும் வகையிலேயே உள்ளன. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு உயர்கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு படிப்படியாக முன்னேறி வெற்றிநடைதுவங்கியுள்ள கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தின் வெற்றியின் இரகசியம் என்னவென்பதை பச்சை தங்கம் குழுவினர் ஆராய்ந்தனர்.
அதில் முதலாவது பாடசாலை அதிபர் உட்பட அங்கு பணிபுரியும் மூன்று ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்பாகும். தாயின் கருவறையில் பிறந்த ஒருவன், வகுப்பறையிலேயே தன்னை புதுப்பித்துக்கொள்கின்றான். எனவே, நல்வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.
கந்தலோயாவில் பணிபுரியும் ஆசான்கள் ‘கிங்’ ஆக இருப்பதைவிட ‘கிங்’ மேக்கராக இருப்பதையே விரும்புகின்றனர். நேர, காலம் பாராது தியாக உணர்வுடன் செயற்படுகின்றனர். 2014 ஆம் ஆண்டே மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் இரவுநேர வகுப்புகள்கூட லாம்பின் உதவியுடனேயே நடத்துள்ளது.
கல்வி கற்பிக்கும் முறையும் வித்தியாசமாகவே இருக்கின்றது. செய்கை வழிமுறையின் ஊடாக சிறந்த விளக்கம் வழங்கப்படுகின்றது. விளையாட்டு, கண்காட்சி, இல்லவிளையாட்டுப் போட்டி, கல்விச்சுற்றுலா என அனைத்திலும் ஏதோவொரு வித்தியாசமும், படிப்பினையும் புதைந்திருக்கும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்வி அமைச்சு தற்போது அமுல்படுத்தும் திட்டங்களை அவர்கள் என்றோ செய்துவிட்டனர் என கூறினால்கூட அது பிழையாகாது. எனவே, அதிபர் கருணாகரன், ஆசிரியர் சிவசக்தி , ஆசிரியர் தவசின் உள்ளிட்டவர்களை பாராட்டியே ஆகவேண்டும். ஆசிரியர் பணியின் ஆழம் என்னவென்பதை அவர்களை சந்தித்தவேளை ஆழமாக புரிந்துகொண்டோம்.
அடுத்தது பெற்றோரின் பங்களிப்பு. பங்களாவுக்கு பிள்ளையை அனுப்பி 10 காசு சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு மத்தியில் - கந்தலோயாவிலுள்ள பெற்றோர் தம் பிள்ளைகள் கற்றுமுன்னேறவேண்டுமென சிந்திப்பவர்கள். பிள்ளைகளுக்காகவே உழைப்பவர்கள். கல்விக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். தங்கிபடிக்கும் பிள்ளைகளுக்கு உணவு அனுப்புதல், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்றல் என அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். பூமாலை அணிவித்து அவர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.
இதனால்தான், பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கெல்லாம் பெற்றோரே பிரதம அதிதிகளாக அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் கதவில் ஒரு வசனம் இருக்கும். இந்த வீட்டிலுள்ள மாணவர் உயர்தரம் படிக்கிறார். பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டார் என்று எழுதப்பட்டிருக்கும். அடுத்த இலக்கு என்ன என்பது பற்றியும் பட்டியலிடப்பட்டிருக்கும். இவை பெற்றோரை மேலும் உற்சாகப்படுத்துகின்றன. கந்தலோயாவிலுள்ள பெற்றோருக்க பச்சை தங்கமும் செல்யூட் அடிக்க விரும்புகின்றது.
அதேவேளை, இப்பாடசாலையின் பழையமாணவர்களும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்துவருகின்றனர். பல்கலைக்கழக விடுமுறை காலத்திலும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் பாடசாலைக்கு வந்து கல்விஅமுதூட்டுகின்றனர். ஏனைய சில பல்கலைக்கழக மாணவர்களும் சமூகசிந்தனையோடு தம்மால் முடிந்தவற்றை செய்கின்றனர். உயர்தரம் படிக்கும் மாணவர்களும், ஏனையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இவ்வாறு அனைத்து சக்திகளும் ஓரணியில் திரண்டு – கல்வி புரட்சியூடாக மாற்றம்காண துடிக்கின்றது. இவர்களின் வழிமுறையை பின்பற்றினால் இலக்கு தவறானது என்பதே எம் கருத்தாகும்.
வளங்களை வாரிவழங்கி, கோடிகளை அள்ளிகுவித்து அவர்கள் வினைத்திறனுடன் செயற்பாடவிட்டால் விமர்சனக்கணைகளைத் தொடுக்கலாம். இருக்கும் வளங்களைக்கொண்டு மாற்றம்காண துடிக்கும் அவர்களை செயற்பாடுகள்மீது குறைகள் இருப்பதாக பச்சைதங்கம் கணிக்கவில்லை.
ஒருமனிதனுக்கு வாழ்வதற்குரிய உரிமை இருக்கின்றது. அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல் இருப்பது மக்களின் மனித உரிமை மீறலாகும்.
கந்தலோயா பாடசாலைக்கு செல்லும் வழியானது குன்றும், குழியுமாகவே காட்சிதருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதப் படகில் பயணிப்பதைவிட இவ்வீதியில் பயணிப்பது படு பயங்கரமாக இருக்கின்றது. ஐந்து கிலோமீற்றரை கடப்பதற்கு ஒருமணிநேரம் சென்றுவிடுகின்றது.
காட்டுவழியாகவுள்ள மூன்றுகிலோமீற்றர் தூரமும் ஆபத்தான பயணம். மழைக்காலங்களில் நினைத்தும் பார்க்கமுடியாது. அட்டை கடியும் மறுபுறம். வீதிப்பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அதை தீர்த்துதருமாறே மக்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிநிற்கின்றனர்.
மேமலையில் இருந்துவரும் மாணவர்களும் காட்டுவழியாக வரவேண்டியுள்ளதால் 30 மாணவர்கள்வரை பாடசாலைக்கு வருவதில்லை. சிறுத்தை உள்ளிட்ட காட்டு விளங்குகளின் அச்சுறுத்தலே இதற்கு காரணம். அரச சார்பற்ற நிறுவனமொன்று தங்குமிட கட்டமொன்றை கட்டிகொடுத்துள்ளது. மேலுமொரு கட்டம் கட்டப்பட்டுவருகின்றது. எனவே, முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்கும் இவ்வீதிப் பிரச்சினையை தீர்க்கவும், கந்தலோயா பாடசாலையை மேலும் தரமுயர்த்தவும் நாமும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம்.
படங்கள், விடியோக்களுக்கான விளக்கங்கள் கொமண்டில் ( கருத்து) பதிவில்
எழுத்து ஆர்.எஸ். பிறை
- பச்சை தங்கம்-
#pachaithangam #lk #kandaloya
  • Like us
  • Comments
Item Reviewed: வலி சுமந்த கந்தலோயா ! Rating: 5 Reviewed By: pachai thangam