Latest News
Friday, May 4, 2018

1939 இல் நேருவின் கொழும்பு பயணமும் இலங்கை -இந்திய காங்கிரஸ் உதயமும்!


 நேரு- தொண்டமான் சந்திப்பு. அருகில் கே. இராஜலிங்கம், பண்டாரநாயக்க ஆகியோர் இருக்கின்றனர்.

ஐந்து நிபந்தனைகளை முன்வைத்த நேருஜி

இலங்கையின் பொருளாதாரத்தை மலையகத் தமிழர்கள் தோளில் சுமந்தாலும், சிங்கள ஆட்சியாளர்களால் மாற்றுகண்ணோட்டத்துடனேயே அவர்கள் பார்க்கப்பட்டனர். இதனால்தான் அனைத்து வழிகளிலும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இதன்ஓர்அங்கமாக 1939 ஆம் ஆண்டு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிக்கு பிறகு அரசாங்க சேவையில் இணைக்கப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளியினரையும் நாடு கடத்த முடிவெடுக்கப்பட்டது.

டி.எஸ். சேனாநாயக்கவின் இந்த தீர்மானத்துக்கு  தமிழ்ப் பிரதிநிதிகளின் போர்க்கொடி தூக்கியிருந்தாலும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் அன்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த காந்திக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது விசேட பிரதிநிதியாக நேருவை, காந்தி 1939 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தையும் கண்டித்திருந்தார்.

கொழும்பில் செயற்பட்ட இந்திய அமைப்புகளிடையே ஒற்றுமை இருக்கவில்லை. இதை உணர்ந்த நேரு அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இலங்கை அரச பிரதிநிதிகளுடனும் பேச்சுகளை நடத்தினார்.

கொழும்பில் உள்ளவர்களைமட்டுமின்றி தோட்டத்தொழிலாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நேரு வலியுறுத்தினார். இதற்கு சிலர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால், நேரு அதை ஏற்கவில்லை.

இழுபறிக்கு மத்தியில் ஜுலை மாதம் 24 ஆம் திகதி இறுதிக்கட்ட பேச்சுகள் நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. பிளவுபட்டிருந்தவர்களெல்லாம் ஒரணியில் திரண்டனர். முடிவையும் நேருவுக்கு அறிவித்தனர்.
அதன்போது அவர் முக்கிய யோசனைகளை முன்வைத்தார்.

1. இலங்கை - இந்திய மத்திய சங்கத்தையும், இலங்கை - இந்திய தேசிய காங்கிரஸையும் கலைத்தல்.

2. புதிதாக உருவாகவுள்ள அமைப்புக்கு மேற்படி இரண்டு சங்கங்களிலிருந்தும் தலா 7 உறுப்பினர்கள்வீதம் 14 பேரை தெரிவுசெய்தல். தலைவர், இரண்டு இணைக் காரிய தரிசிகள், ஒரு பொருளாளர் என்று நால்வரை இணைத்தல்.

3. இந்த 18 உறுப்பினர்களும் இணைந்து, வெளியிலுள்ள இதர இந்திய அமைப்புகளிலிருந்து 7 அங்கத்தவர்களை ஒருமித்த முடிவுடன் சேர்த்தல்.

4. புதிதாக உருவாகவுள்ள அமைப்பில் இவரகள் 25 பேரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக செயற்படவேண்டும்.

5. புதிதாக உருவாக்கப்படவுள்ள ஸடதாபத்துக்கு இலங்கை, இந்திய காங்கிரஸ் என்று பெயரிடல்.

மாவட்ட ரீதியில் கிளைகள் அமைக்கப்படவேண்டும் என்று கூறிய நேரு, புதிய அமைப்புக்கான கொள்கைத் திட்டங்களையும் வகுத்துக்கொடுத்தார். இலங்கை, இந்திய காங்கிரஸின் முதல் தலைவராக லக்ஷ்மன் செட்டியார் என்பவர் செயற்பட்டார்.
இலங்கை-இந்திய காங்கிரஸின் நிர்வாகசபை - 1940 கம்பளை மாநாடு.


எனினும், திட்டமிட்டப்படி செப்டம்பரில் மாநாடு நடைபெறவில்லை. கொழும்பில் இருந்தவர்கள் மாநாட்டை நடத்த முன்வரவில்லை. பிறகு கம்பளை கிளையே மாநாடை நடத்த முன்வந்தது. 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெற்றது.  சௌமியமூர்த்தி தொண்டமான், இராஜலிங்கம் போன்றோர் விழா ஏற்பாட்டுக்குழுவில் பிரதான இடத்தை வகித்தனர். இவ்வமைப்பே காலப்போக்கில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.

எழுத்து ஆர்- எஸ். புpறை

மூலம்- படங்கள். ‘தலைவர் தொண்டமான்’ எனும் நூல்.
பச்சை தங்கம

  • Like us
  • Comments
Item Reviewed: 1939 இல் நேருவின் கொழும்பு பயணமும் இலங்கை -இந்திய காங்கிரஸ் உதயமும்! Rating: 5 Reviewed By: pachai thangam