Latest News
Wednesday, October 9, 2019

ஜனாதிபதி தேர்தலும், இதொகாவும் 1982 – 2015!

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்து, பரப்புரைகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் இத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்துவருகின்றது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு ஆதரவு வழங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கடைசியாக 2015 இல் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது.

ஆனால் இம்முறை இ.தொ.கா. எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை அக்கட்சியின் தேசிய சபையே தீர்மானிக்கும். எதிர்வரும் 13 ஆம் திகதி தேசிய சபை கூடவுள்ளது.
இந்நிலையில் 1982 முதல் 2015 வரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இ.தொ.கா. எந்தெந்த கட்சிகளை ஆதரித்துள்ளது என்பது தொடர்பான தகவலை வழங்குவதே இப்பதிவின் பிரதான நோக்கமாகும்.
எனினும், அதற்கு முன்னர் சில விடயங்களை பற்றி குறிப்பிட்டாதல்தான் தெளிவு பெறலாம். எனவே, குடியுரிமை பறிப்பு, சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தம் போன்ற தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில்
மலையக பிரதிநிதித்துவம்……
இலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய இலங்கை, இந்திய காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிட்டு 3.83 சதவீத வாக்குகளுடன் 6 இடங்களில் வெற்றிபெற்றது.
1.சௌமியமூர்த்தி தொண்டமான் – 9,386
நுவரெலியா தொகுதி.
2.சீ.வி. வேலுபிள்ளை – 10,645
தலவாக்கலை தொகுதி.
3.கே. குமாரவேலு – 6,722
கொட்டகலை தொகுதி.
4.ஜீ.ஆர்.மோத்தா – 9,086
மஸ்கெலியா தேர்தல் தொகுதி.
5.கே. இராஜலிங்கம் – 7,933
நாவலப்பிட்டிய தொகுதி.
6.எஸ்.எம். சுப்பையா – 27,121
பதுளை தொகுதி.
குடியுரிமை, வாக்குரிமை
பறிப்பு
1948 இல் பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் இந்திய வம்சாவளி மக்கள் அநாதைகளாக்கப்பட்டனர்.
1963 இல் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அத்துடன், 10 இலட்சம்பேரில் மீதமிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரில் 50 வீதமானோரை இந்தியாவும், 50 வீதமானோரை இலங்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என 1974 இல் மற்றுமொரு ஒப்பந்தம் (சிறிமா – இந்திரா) செய்துகொள்ளப்பட்டது.
இரு அரசுகளினதும் இந்த நடவடிக்கைகளானவை பாரிய மனித உரிமைமீறல்களாகவே விமர்சிக்கப்பட்டது.
முதலாவது பொதுத்தேர்தலில் தெரிவானவர்கள் 1952 வரை பதவி வகித்தனர்.
ஆனால் கால்நூற்றுகாலமாக அரசியல் ரீதியில் மலையக மக்கள் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர். இக்காலப்பகுதியில் தொண்டமானுக்கு இரண்டு தடவைகள் நியமின எம்.பி. பதவி வழங்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 1977 இல் சேவல் சின்னத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் 35,743 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
(குடியுரிமை பறிப்பு, பிராஜாவுரிமை கோரி விண்ணப்பம் தாக்கல் உட்பட அது தொடர்பான மேலதிக விபரங்கள் தனிப்பதிவாக வரும்)
முதலாவது ஜனாதிபதி தேர்தல்
1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் மலையகத் தமிழர்களின் ஆதரவை முழுமையாக பெறலாம் என்ற அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு (சட்டதிருத்தத்தை) செய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் இணங்கியது. 1988 இல் நாடற்றவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலைப்பு புலிகள், மலையக அமைப்புகள் ஆகியனவும் மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிவாகை சூடியது.
ஆட்சியை தீர்மானித்த சந்திரசேகரன்
1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே இ.தொ.கா. போட்டியிட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன. இந்நிலையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.
இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்காவுக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.
இதன்போதே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சந்திரசேகரன் உருவெடுத்தார். சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்துக்கு இவரே பிள்ளையார் சுழிபோட்டார்.
தேர்தலின் பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்ட இ.தொ.காவின் தலைவருக்கு சந்திரிக்காவின் அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும், மக்களை தமது மனசாட்சியின் பிரகாரம் வாக்களிக்குமாறுகூறிவிட்டு தொண்டமான் இந்தியா பறந்தார் எனவும் கூறப்படுகின்றது.
( இது தொடர்பில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை)
1999 ஒக்டோபர் 30 ஆம் திகதி சௌமியமூர்த்தி தொண்டமான் காலமானார். இ.தொ.காவின் தலைமைப்பதவி ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 1999 டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கியது.
2001, 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.
2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இறுதி நேரத்தில் ஆதரவு வழங்கியது.
2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது.
2015 இலும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டது. எனினும், மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தபின்னர் மைத்திரிக்கு ஆதரவு வழங்கியது. அரசால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் சார்பாக வாக்களித்தது.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வாறு உருவானது?
மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளிலும் தலைநகர் கொழும்பில் வாழ்ந்த – (அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட – ஓரங்கட்டப்பட்ட ) மலையகத் தமிழர்களின் பாதுகாப்புக்கான ஓர் அரசியல் அரணாகவே இந்தியாவின் தலையீட்டுடன் 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது.
இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டதால் – இவ்விவகாரத்தில் நேரில் தலையிட்டது இந்திய மத்திய (காங்கிரஸ்) அரசாங்கம்.
மகாந்தமா காந்தியும், நேருவும் தீவிரமாக செயற்பட்டு 5 நிபந்தனைகளுடன் வெற்றிகரமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கை – இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவராக லக் ஷ்மன் செட்டியார் தெரிவுசெய்யப்பட்டார். முதலாவது மாநாட்டை 1939 செப்டம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக அது நடைபெறவில்லை.
எனினும், 1940 ஆம் ஆண்டு அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். கே. இராஜலிங்கவும் இணைந்து காங்கிரஸின் முதலாவது மாநாட்டை கம்பளையில் நடத்தினர். நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
இதன்படி தலைவராக தொண்டமானும், பொதுச்செயலாளராக ராஜலிங்கவும் செயற்பட்டனர். காலப்போக்கில் இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது.
மிக முக்கிய தொழிற்சங்க தளபதிகளான, தொழிற்சங்க துறவி என போற்றப்படும் வெள்ளையன், வீடற்றவன் நாவல் தந்த சி.வி. வேலுபிள்ளை, அசீஸ் போன்றவர்களால் இ.தொ.கா. அரசு வேகத்தில் வளர்ச்சி கண்டது.
இலங்கை, இந்திய காங்கிரஸின் இரண்டாவது மாநாடும், இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் முதலாவது மாநாடும் 1942 இல் கண்டியில் நடைபெற்றபோது இரு அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.
தொண்டமான் அணியிலிருந்த அமரர். வெள்ளையனும் கொள்கைரீதியிலான முரண்பாடு காரணமாக பிரிந்துசென்று, தொழிலாளர் தேசிய சங்கத்தை அமைத்தார். சி.வி. வேலுபிள்ளையும் அதில் இணைந்தார். அதற்கு முன்னர் அஸீஸ் வெளியேறினார்.
முக்கிய புள்ளிகளின் வெளியேற்றத்தால் இ.தொ.கா. ஒரு கட்டத்தில் ஆட்டம் கண்டிருந்தாலும் தொண்டமான், இராஜலிங்கம் உட்பட மேலும் பல தலைவர்கள் புத்துயிர் கொடுத்தனர்.
1977 இல் இதொகாவுடன் இணைந்த சந்திரசேகரனும் கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து வெளியெறி மலையக மக்கள் முன்னணியை உருவாக்கினார்.
  • Like us
  • Comments
Item Reviewed: ஜனாதிபதி தேர்தலும், இதொகாவும் 1982 – 2015! Rating: 5 Reviewed By: pachai thangam