Latest News
Tuesday, April 24, 2018

கங்காணிதான் அன்று ‘பிக்பொஸ்’!

“ கங்காணி பொண்டாட்டி

காசுக் காரி என்றிருந்தோம்

பச்சக் காட்டு தொங்கலிலே

மொச்சக் கொட்ட விக்கிறாளே…!

கங்காணி பொண்டாட்டி

காசுக்காரி என்றிருந்தேன்..

அரிசி காசு கேட்டதுக்கு…

ஆட்டுறாளே தண்டட்டியே…”







தோட்டத்தொழிலாளர்கள் கங்காணிமீதிருந்த வெறுப்பை அன்று பலவழிகளில் வெளிப்படுத்தினர். அவற்றில் வாய்மொழிமூல பாடலும் ஒரு வழியாகும். கங்காணியின் மனைவிமீது வசைமாரி பொழிந்து, தொழிலாளர்கள் மனம் மகிழும் பாடலொன்றின் வரிகளே மேல் தரப்பட்டுள்ளன.

இந்தியாவில் விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பாகிய ‘பிக்பொஸ்’ என்ற நிகழ்ச்சியானது உலகில் தமிழர்கள்வாழும் நாடுகளிலெல்லாம் சூப்பர் ஹிட்டானது.

பல்துறைகளிலும் கொடிகட்டிபறக்கும் பிரபலங்களை ஒரு வீட்டில், 100 நாட்கள் தங்கவைத்து, அவர்களின் நடத்தைகளை அவதானிப்பதே ‘பிக்பொஸ்’ஸின் பொறுப்பாக இருந்தது. அகம் தொலைக்காட்சி வழியாக உள்ளே நடப்பவற்றை அவர் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பார். அவரின் பார்வையிலிருந்து தப்பவே முடியாது.





படத்தில் காட்சிதரும் ஆண்தான் கங்காணி



நமது தோட்டங்களில் அன்றிருந்த கங்காணிமாரும் இப்படிதான். நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட ஜனாதிபதிபோல்தான் அவர்கள் செயற்பட்டனர். தொழிலாளர்கள்மீது கடமைநேரத்தின்போது கழுகுப்பார்வை செலுத்துவார்கள். கண்காணிப்பு கமராக்கள்கூட அவர்களின் பார்வையின் முன் தோற்றுவிடும் என்றே சொல்லவேண்டும்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய வகையில் பயன்படுத்துவார்கள். எவருக்கும் பாரபட்சம் காட்டமாட்டார்கள். ஒருநிமிடம் பிந்திவந்தால்கூட சொற்கணைகளை சரமாரியாக தொடுத்துவிடுவார்கள். இதனால், கங்காணியைக் கண்ணால்கூட தொடை நடுங்கியவர்களும் இருக்கத்தான் செய்தனர்.


சில கங்காணிமார் துரைமாருக்கு விசுவாசம்மிக்கவர்களாக இருந்தனர். மேலும் சிலர் தொழிலாளர்களை மேலும் அடிமையாக்கினர் என்பதையும் மறந்திட முடியாது. மருந்து கங்காணி, கவ்வாத்து கங்காணி, இஸ்கூல் கங்காணி,பெரிய கங்காணி, சின்ன கங்காணி யென பல கங்காணிமார்கள் இருந்தனர்.



இன்றும் தோட்டப்பகுதிகளில் கங்காணிகள் இருக்கின்றனர். அன்றுபோலவே அரைகாற்சட்டை, தலைப்பாகை, பெரியமீசை, கம்பு, பெரியகுடையுடன் காட்சிதருகின்றனர். ஆனால், அன்றிருந்த வீரியம் காணாமல்போயுள்ளது. அதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. கங்காணிமாருக்கென மறுபக்கமொன்றும் இருக்கின்றது.

எதுஎப்படியோ மலையக வரலாறு என வரும்போது கங்காணிமாரையும் மறந்திடமுடியாது. கங்காணி தொடர்பில் உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.

(' கங்காணி' குறித்த பாடலானது ' மலையகத் தமிழர்' நாட்டுப்புற பாடல் எனும் நூலிலுள்ளது.

அந்த நூலின் தொகுப்பாசிரியர் மு. சிவலிங்கமாவார்.)

- பச்சை தங்கம்-

தமிழ் நாட்டில் ஊட்டி பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றின் காட்சியே இந்த காணொளியாகும். தமிழ் நாடு நம் தொப்புள்கொடி உறவு என்பதை மறந்திட முடியுமா என்ன?
  • Like us
  • Comments
Item Reviewed: கங்காணிதான் அன்று ‘பிக்பொஸ்’! Rating: 5 Reviewed By: pachai thangam