கவிதைக்காகவே வாழ்ந்த மடகொம்பரை மைந்தன்
என்டன் பாலசிங்கத்தின் நெருங்கிய தோழன்
விருது வழங்காமல் ஓரங்கட்டப்பட்டவர்
கடல்போல் அறிவிருந்தும், அனைத்தையும் எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் இருந்தும் ‘மௌன உலகுக்குள்’ வாழ்ந்து மடியும் நபர்கள் பற்றி பெரிதாக எவரும் அறிந்துவைப்பதில்லை. தெரிந்து கொள்வதற்கு ஆர்வமும் காட்டுவதில்லை. ஆனால், அத்தகையவர்கள் கடந்துவந்த பாதையானது சாதனை தடமாக விளங்குமென்பதே நிதர்சனம்.
அதுமட்டுமல்ல, ஒருபுறத்தில் திறமைகள் குவிந்திருந்தாலும் மறுபுறத்தில் பந்தா காட்டாமல் வாழ்ந்தால் இறுதியில் காணாமல்போனோர் பட்டியல்தான் மிஞ்சும் என்பது ஒருசில கலைஞர்களின் மரணம் நமக்கு தந்த பாடமாகும். இந்நிலைமை மாறவேண்டும்.
கலைஞர்களின் வாழ்விலும் இருண்டபக்கமொன்று இருக்கின்றது. அந்த பக்கத்தை புரட்டினால் எழுத்துகள்கூட விம்மிஅழுவதை உணரலாம்.
நம் மலை மண்ணில் நமக்காக கிடைத்த காலத்தால் அழியாத செல்வங்களில் கவிஞர் ஸி.எஸ். காந்தியும் ஒருவர்.
ஹட்டன், வட்டகொடை – மடகொம்பரையில் 1933 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்த ஸி. எஸ். காந்தி, தோட்டப்பாடசாலையிலேயே ஆரம்பகல்வியை கற்றார். குமரன் பெரிய கங்காணியின் மகனான சுப்பிரமணியமே இவரின் தந்தையாவார்.
வீடற்றவன் நாவலை தந்த கவிஞர் சி.வி. வேலுபிள்ளை இவரின் தாய்மாமன் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தந்தை, தாத்தா ஆகியோரும் தமிழையும், கவியையும் இருகண்கள்போல் காப்பவர்கள். எனவே, கவிதை எழுதும் ஆற்றலானது காந்தியின் இரத்தத்திலேயே ஊறியிருந்தது என கூறினால் அது மிகையாகாது.
அரசாங்கத்தின் தமிழ் இலக்கிய பாடப்புத்தகத்தில் மலையக கவிஞர்கள் பட்டியலில் இவரின் பெயரும் உள்ளடங்கியுள்ளது. எழில்கொஞ்சும் எம் மலைநாட்டிலுள்ள மிக முக்கிய திருத்தலங்கள் தொடர்பில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘சுடர்ஒளி’ வார இதழில் அவை தொடர்ச்சியாக வெளிவந்தன.
தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்த காந்தி அதன்பிறகு வீரகேரியில் இணைந்தார். அங்கு நெடுநாட்களாக உதவி ஆசிரியராகவும், இரவுநேர பதிப்புக்கு பொறுப்பானவராகவும் பணிபுரிந்தார். வெளிநாட்டு செய்திகளை தொகுத்துவழங்குவதில் அன்று அவருக்கு நிகர் எவரும் இருக்கவில்லையென்றே கூறவேண்டும்.
வீரசேகரியில் இவர் கடமையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக ஆலோசகராக இருந்த மாமனிதர் அன்டன் பாலசிங்கம்தான் இவரின் நெருங்கிய நண்பர். இருவரும் ஒரே அறையில்தான் வசித்துள்ளனர். புத்தகம் வாசிப்பதே இவர்கள் இருவருக்குமான பொழுதுபோக்காகும். அலுவலக விடுமுறை நாட்களில் கொழும்பிலுள்ள பூங்காக்களுக்குசென்று மரநிழலில் அமர்ந்து படிப்பதையே அதிகம் விரும்பியுள்ளனர்.
பெரும்பாலான முக்கியஸ்தர்களின் வாழ்வுக்கு சாவுமணியாக அமைந்தது மதுவே. திருமணம் முடிப்பதற்கு முன்னரே காந்தியும் பகுதியளவு மதுபழக்கத்துக்கு அடிமையானார். இதனால், வீரசேகரி பத்திரிகையிலும் வேலை இழக்கநேரிட்டது. அனைவருடனும் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் இவர் பழகியதால் பலர் இவரை தமது சொந்த நலனுக்காக பயன்படுத்தினர். முக்கிய அரசியல் கட்சிகளின் ஊடகச்செயலாளர்கள் என கூறிக்கொள்பவர்களெல்லாம் அறிக்கையெழுதுவதற்காக இவரையே தேடிவருவர். ( எவரும் மதுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதாலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்ட நேரிட்டது. மன்னிக்கவும்)
வீரசேகரியிலிருந்து விலகியதால் ‘சுடர்ஒளி’யில் இணைந்தார். வெளிநாட்டு செய்திகளுக்கு பொறுப்பாக இருந்ததுடன், வார இதழில் கவிதை பக்க பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.
தள்ளாடும் வயதிலும் உழைத்தே வாழவேண்டும் என நினைத்த காந்தி, ஊடகத்துறையில் அனைவரும் மிளிரவேண்டுமென நினைப்பவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘வெட்டு, குத்து’ கலாசாரத்துக்கு துணைபோகமாட்டார். பல இளம் ஊடகவியலாளர்களை முதுகில் தட்டி எழுப்பிவிட்டாரேதவிர, முதுகில் குத்தி வீழ்த்தியதில்லை.
தமிழிழ் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் கவி படைக்கும் ஆற்றல்கொண்டவர். மரணிப்பதற்கு இருமாதங்களுக்கு முன்னர் அவருக்கு பயங்கர வயிறு வலி ஏற்பட்டது. ‘அட, அது கேஸ்டிக்தானே’ எனகூறி வலியுடன் வேலைசெய்தார். மருத்துவ சிகிச்சையை புறக்கணித்தே வந்தார். இறுதிகட்டத்தில்தான் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பிறகுதான் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி உயிரையும் விட்டார். (2016.06.26)
வறுமைகாரணமாக மத அனுட்டானங்கள் எதுவுமின்றி இன்றி எளிமையாக இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் ஒருசிலரே கலந்துகொண்டனர் என்பது பெரும் கவலையை தந்த விடயமாகும். மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சுடர் ஒளி பத்திரிகையின் சார்பில் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், முன்னாள் ஆசிரியர் அருண் ஆகியோரும், மடகொம்பரை மக்கள் சார்பாக எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தினர்.
உயிரிழப்பதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின்போது வட்டகொடையில் நடைபெற்ற சம்பவங்களை எழுதிக்கொண்டிருந்தார். அவை முழுமைப்பெறவில்லை. கணணியில் சேமித்து வைப்பதற்குரிய நுட்பம் அவருக்கு தெரியாததால் நாளாந்தம், அவர் டைப் செய்த எந்தவொரு விடயமும் ‘சேவ்’ ஆகவில்லை. சில விடயங்களை ‘பிரின்ட்’ போட்டு வீட்டுக்குகொண்டுசென்றுள்ளார் என அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்தனர்.
பல கவிதைகளை எழுதியிருந்தாலும் ‘கவிதை புத்தகமொன்றை’ எப்படியாவது வெளியிடவேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறைவேறவில்லை. இறுதிகட்டத்தில் மணிமேகலை பிரசுரத்தின் உதவியை நாடியிருந்தாலும் அதுவும் கைகூடவில்லை. இதனால், அவர் மனம் நொந்துபோய் இருந்தார்.
அதுமட்டுமல்ல, ஊடகத்துறையில் 30 -40 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். ஆனால், காந்திக்கு அது வழங்கப்படவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை சொன்னால் அது பெரிய பிரச்சினையாகிவிடும். ஊடகங்களாலும், ஊடகவியலாளர்களாலும் இறுதிநேரத்தில் இவர் கைவிடப்பட்டிருந்தார் என்பது கசப்பான உண்மையாகும்.
வத்தளையில் வாடகைவீடொன்றில்தான் காந்தி சேர் வசித்தார். சிங்கள பெண்ணையே மணம் முடித்திருந்தார். ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். அவர் எழுதிய சில கவிதைகள் வீட்டில் இருப்பதாக தகவல். எனவே, காந்தியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வரவேண்டும். மலையகத்திலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களும், இவரிடம் ஆங்கிலம் பயின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டது இறுதியாக இவர் சொந்தஊருக்கு சென்ற பயணமாகும்.
எழுத்து – எஸ்.பிறை-
- பச்சை தங்கம்-

சுடர் ஒளி அலுவலக ஊழியர்களுடன் -2010 |