Latest News
Friday, April 27, 2018

மலையக தியாகி முத்துசாமி!

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
அணிதிரண்ட ‘1959 போராட்டம்’!

உரிமைக்காக உயிர்கொடுத்து தியாகியானார் முத்துசாமி!!


தோட்டதுரைமாரில் ஒருசிலர் அன்று தம்மை பேரரசர்களாகவே கருதினர். தொழிலாளர்களை அடிமைகள்போல் நடத்துவதே அவர்களின் தொழில் தர்மமாக இருந்தது. உண்பதற்கு மட்டுமே வேலையாட்கள் வாய்திறக்கவேண்டும் என்பதே எழுதப்படாத சட்டமாக அமுலில் இருந்தது. பங்களாவில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள்கூட எம்மவர்களுக்கு மறுக்கப்பட்டன.


முதுகெலும்பில்லாத மண்புழுகூட தம்மை எவரேனும் தடியால் தட்டும்போது துள்ளி எழுந்தேனும் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளியிடுகின்றது. எனவே, இவ்வளவு அநீதி நடந்தம், அட்டூழியங்கள் அரங்கேறியும் எம்மவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா என்ன?

தோட்டதுரையின் அடாவடிகளுக்கு எதிராகவும், கம்பனியின் அடக்குமுறை நிர்வாகத்தைக் கண்டித்தும் 1959 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் வீதியிலிறங்கிய போராடிய வரலாற்றை அறிவீரா? தொழிலாளர் உரிமைகளுக்காக தம் உயிரை தியாகம்செய்த முத்துசாமியை பற்றி தெரியுமா?

மாத்தளை என்றதுமே தற்போது பஞ்சரதம்தான் உங்கள் விழித்திரைகளில் பவனி வரும்? அதுமட்டுமல்ல, மலையகம் என்ற கட்டமைப்புக்குள் அன்று முதல் இன்றுவரை மாத்தளை மண்ணுக்கு பெரிதாக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையென்பது கசப்பான உண்மையாகும். சரி வாருங்கள் வரலாறுக்குள் நுழைவோம்.

மாத்தளை, கல்கெடுவை பகுதியிலேயே சக்கரவத்தைத் தோட்டம் ( மாத்தென்னை) அமைந்திருந்தது. கம்பனிக்குரிய தோட்டமாகும். போலிங் என்ற பறங்கியரே அங்கு தோட்ட முகாமையாளராக ( பெரியதுரை) பணிபுரிந்தார். தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது வாரிசான போலிங் மொரிஸை சின்னதுரையாக்கினார்.

தனக்கு சம்பளம் வழங்கும் கம்பனிக்கு விசுவாசமானவராகவே அவர் திகழ்ந்தார். அதனால், தொழிலாளர்களை விலங்குகள்போலவே பார்த்தார். எந்நேரமும் மாடாக உழைக்கவேண்டும் என்பதே அவரின் முகாமைத்துவ நெறி. இதற்கு சின்னதுரை உட்பட உயர்பதவிகளை வகித்தவர்கள் உடந்தையாக இருந்தனர்.

தொழிலாளர்களுக்கு திரும்பும் திசையெல்லாம் வலியும், வேதனையுமே காத்திருந்தது. உரிமை, நிம்மதியெல்லாம் மாயமாகின. நாட்கள் செல்ல, செல்ல அடக்குமுறையும் உச்சம் தொட்டது. பொறுமைக்குள் ஒரு எல்லையுண்டு. ஆனால், அந்த எல்லை தாண்டியும் தொழிலாளர்கள் பொறுமைகாத்தனர். இனியும் முடியாது என்ற கட்டம் வந்ததும் பொங்கியெழுந்தனர்.
தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு நடத்த அனுமதிகோரினர். இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தோட்ட மக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலேயே அங்கம்வகித்தனர். பிரதிநிதிகளின் உதவியுடன் பேச்சுகள் தொடர்ந்தன. ஆனால், தீர்வுகள் வழங்கப்படவில்லை. வழமையைவிடவும் வதைகள் புதுவடிவில் அணிவகுந்துவந்தன.

ஆனாலும், தொழிலாளர்கள் அடிபணியவில்லை. உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், தொழிலாளர்களை கூறுபோடும் பிரித்தாளும் சூழ்ச்சியை தோட்ட துரையின் உதவியுடன் நிர்வாகம் கையாண்டது. எலும்புத்துண்டுகள் அள்ளிவீசப்பட்டன. இந்த மாயவலைக்குள் ஒரு சில தொழிலாளர்கள் அகப்பட்டனர். மாற்று தொழிற்சங்கம் அமைக்குமாறும் அவர்கள் தூண்டப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிமைகளை கோரியும் ஏனைய தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தொழிலுக்கு செல்வதற்கு மறுத்தனர். எனினும், விலைபோன ஊழியப்படை, கடமைக்கு சென்றது. இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

வேலைக்கு சென்றவர்களிடம் தமது நிலையை எடுத்துரைத்து, கம்பனியின் துரோகச்செயலை பட்டியலிட்டுக்காட்டுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்று சென்றது. அவ்வேளையில், நிர்வாகத்தின் கைக்கூலிகள் சிலர் ஆயுதமேந்தி அவர்களை தடுத்தனர். இந்த தகவல் தோட்டத்துக்கு சென்றதும், தொழிலாளர்கள் அணிதிரண்டனர். கல்வீச்சு தாக்குதலும் நடத்தினர்.
ஆரம்பகாலத்தில் மாத்தளை பகுதிகளிலுள்ள
தோட்டங்களில் பணிபுரிந்த முகாமையாளர்கள்


பதிலடிகொடுக்கும் வகையில் ஆயுதகும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் காலக்கார முத்துசாமி குண்டடிபட்டு உயிர்துறந்தார். மலையக தியாக வரலாற்றிலும் இடம்பிடித்தார். சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் பொங்கியெழுந்த மக்கள் வீறுகொண்டnழுந்த போரடினர். சுழவுள்ள தோட்டமக்களும் ஆதரவு வழங்கினர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு நீதிக்காக குரல்எழுப்பினர். முத்துசாமியின் சடலத்தையும் தோளில் சுமந்து வீதிவலம் வந்தனர். இறுதிக்கிரியைகளும் பெரும் எழுச்சியுடன் நடத்தப்பட்டது. தொண்டமான், வெள்ளையன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களும் பங்கேற்று இரங்கல் உரை நிகழ்த்தினர்.

அதன்பிறகும் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் தொழிலாளர்களிடம் மண்டியிடவேண்டியநிலை நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கும் விடுதலை கிடைத்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் கைதாகி காலப்போக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டார். சூடு நடத்தியகுழுவுக்கு தலைமைதாங்கியவரும் தமிழர் ஒருவர். மேற்படி சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாக வரலாற்றில் இணைந்த காலக்கார முத்துசாமிக்கு செல்லையா, கருப்பையா, ராமலிங்கம் என்று மூன்று மகன்மார் இருக்கின்றனர். மனைவியின் பெயர் பெரியம்மாள். போராட்டகாலத்தில் தோட்டகமிட்டி தலைவராக சிவனுவும், தோட்டகங்காணியாக வேலுசாமியும் பணியாற்றினர். முத்துசாமிக்கு ‘பச்சை தங்கம்’ வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கின்றது.
தோட்டத்துக்கு பொறுப்பான கம்பனிகள்


தகவல் மூலம் - ‘உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ நூல்.
எழுத்து- ஆர்.எஸ். பிறை
( மேற்படி போராட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் இருந்தால் உரிமையுடன் பகிர்ந்துகொள்ளவும்)

ஆரம்பகாலத்தில் மாத்தளை பகுதிகளிலுள்ள தோட்டங்களில் பணிபுரிந்த முகாமையாளர்கள்
............
தோட்டத்துக்கு பொறுப்பான கம்பனிகள்


படம் - இணையம்

போலிங்
  • Like us
  • Comments
Item Reviewed: மலையக தியாகி முத்துசாமி! Rating: 5 Reviewed By: pachai thangam