Latest News
Wednesday, April 25, 2018

கொழுந்து கூடை

கருவைக்கூட ஈரைந்து மாதங்கள்தான் சுமப்பார்கள். ஆனால், கட்டிளமைப்பருவம் வந்ததும் தேயிலை தோட்டத்துக்குள் காலடிஎடுத்துவைத்தது முதல் முதுமைக்குரிய அடையாளங்கள் முழுமையாக நெருங்கும்வரை எங்கள் மாதர்குலம் கூடையை தலையில் சுமப்பார்கள்.


கொழுந்து கூடையோடு எம் தாய்மார் மலையேறும் காட்சியை நினைக்கையில்இதயம் விழிமூடி ஒப்பாரி வைக்கின்றது. தனது இளமையையும், இன்பத்தையும் தியாகம்செய்துவிட்டுதானே எம்மை வளர்த்துள்ளனர். எனவே, கொழுந்துகூடை சுமக்கும் ஒவ்வொருதாயுமே ஏதோவொரு வகையில் தியாகிதான்.

தோட்ட நிர்வாகத்தாலேயே கொழுந்து கூடைகள் வழங்கப்படும். மூங்கிலாலேயே அது பின்னப்பட்டிருக்கும். தலையில் மாட்டிக்கொள்வதற்கு ஏதுவான வகையில் பாரிய கயிறும் கட்டப்பட்டிருக்கும். தோட்டங்களிலுள்ள சிலர் கூடை பின்னுவதுண்டு. அந்த கலையை அவ்வளவு இலகுவில் கற்றுவிடமுடியாது. அதற்கெல்லாம் ஒரு கைராசி வேண்டுமென எங்கள் தோட்டத்தில் வாழ்ந்த கோபுரமால் தாத்தா மார்தட்டிக் கொண்டது என் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

கூடையானது சுமார் ஒருகிலோவுக்கும் கூடுதலாக இருக்குமென்றே என் மன கணக்கு சொல்கின்றது. (சரியான நிறைதெரிந்தவர்கள் கீழ் பதிவிடுங்கள்). கூடையை சுமந்தபடியே மலையேறவேண்டும். தலையில் மாட்டுவதற்காக இருக்கும் அந்த கயிர் அல்லது பட்டி தலையை வெட்டிவிடக்கூடாது என்பதற்காக தலைப்பாகை கட்டப்படும்.

கூடையை மாட்டுவதற்கென ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். லயன்வீடுகளில் முன்புறத்தில் ஜன்னலொன்று இருக்கும். அதற்கு அருகில் தொங்கவிடப்படும். அவ்வாறு அல்லாவிட்டால் முன்அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். கூடைக்கு அருகே 'வரிச்சி' யும் இருக்கும். அந்த கூடைக்குள் ரபர் சீட், படங்கு ஆகியனவும் போட்டுவைக்கப்பட்டிருக்கும்.

இருவீடுகளுக்கிடையிலான எல்லைப்பிரிப்பாகவும் கூடை தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு அங்குளமேனும் அந்த பக்கம்சென்றால் எல்லைப் பிரச்சினை ஆரம்பமாகிவிடும். அத்துடன், கோலி அடைப்பதற்காகவும், அடைவைப்பதற்காகவும்கூட கூடை பயன்படுத்தப்படும். சேதமடைந்துவிட்டால் பழையப்பொருட்களை சேமிப்பதற்குரிய ஒரு மினி பிரோவாககூட இருக்கும்.

வெறும்கூடையை தூக்கவே இப்போது கஷ்டமாக இருக்கின்றது. அதற்குள் 20 கிலோ கொழுந்தை சுமந்துக்கொண்டு அதுவும் எப்படி காடுமலையேறுவது? கற்பனை செய்துபார்க்கையிலேயே வழிநீர் பெருக்கெடுக்கின்றது அல்லவா? பிளாஸ்டிக் கூடைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.

 கூடை இல்லாதகாலத்தில் யூரியா பையில் கொழுந்து சுமப்பதையும் மறந்துவிடமுடியாது என்ன?
கொழுந்துகூடை என்பது எமது அடையாளமாகிவிட்டது. ஆண்டுகள் பல கடந்தாலும் அது எம் மனங்களைவிட்டு அகளாது. 

( உங்கள் கருத்துகளையும் உரிமையுடன் முன்வைக்கலாம். தவறுகள் இருந்தால் தாராளமாகவே சுட்டிக்காட்டலாம்.)


- பச்சை தங்கம்-
  • Like us
  • Comments
Item Reviewed: கொழுந்து கூடை Rating: 5 Reviewed By: pachai thangam