Latest News
Monday, April 30, 2018

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம்


மலையகத்தோட்டத்தொழிலாளர்களை இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் வேற்றுக்கிரகவாசிகள்போல் பார்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதனால்தான், எம்மவர்களின் பிள்ளைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேறி – வெற்றிநடைபோடக்கூடாது என்பதில் இந்த நயவஞ்சகர்கள் குறியாக இருக்கின்றனர்.
பாரத நாட்டிலிருந்து பஞ்சம்பிழைப்பதற்காக எம் பாட்டன், முப்பாட்டன் லங்காபுரிக்கு வந்து குடியேறினாலும், எவர் குடியையும் கெடுக்கவில்லை. கள்ளம், கபடமற்றவர்களாக வாழ்ந்து மடிந்தனர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது.
கொட்டும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும் கருதாது, காடு, மலைகள்ஏறி நாட்டை வளமாக்கினர். இப்படி அவர்கள் கடந்துவந்த வலிசுமந்த பயணத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் எடுத்துரைக்கமுடியாது.
எம் மக்களுக்கென தனியானதொரு வாழ்க்கை முறைமையும், கலாசாரமும் இருக்கின்றது. நவீன யுகத்துக்கேற்ப வாழ்க்கை முறைமைமாறி வந்தாலும், கலை, கலாசாரம் என்பன அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.
அதுமட்டுமல்ல, எம்மவர்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தனர் என்பது இன்றுள்ள எம் சந்ததித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கும்பா, சிமிலி லாம்பு, ஆட்டுக்கல் என்வனவெல்லாம் மாயமான பொருட்களின் பட்டியலில்.
இருந்தும் எம்மவர்களின் வாழ்வியல் பற்றிய தகவல்களையும், பயன்படுத்திய பொருட்களையும், வாழ்வு முறைமையையும் ஆணவமாக சேமித்து வைத்துள்ளது சமூக அபிவிருத்தி நிறுவகம். இதன் ஸ்தாபகராக பி. முத்துலிங்கம் ஐயா திகழ்கின்றார். இதற்காக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அருங்காட்சியகமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்துக்குள் இருக்கும் படங்கள், பொருட்கள், வரலாற்று ஆவணங்கள் என்பன பச்சைத்தங்கம் என்றே கூறவேண்டும்.
மலையக தொழிற்சங்கவாதியான அமரர். நடேச அய்யர், அவரின் பாரியாரான மீனாட்சியம்மா உள்ளிட்ட சிலரையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், மேலும் பல முக்கிய தொழிற்சங்கவாதிகளின் விவரங்களும் இருக்கின்றன.அத்துடன், தோட்டத்தொழிலாளர்களுக்கான உரிமைப்போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளின் விவரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.

( முல்லோயா கோவிந்தன் (1939) முதல் பழனிவேல் (1980) வரை)
அதேவேளை, தென்னிந்தியாவிலிருந்து வந்தது, மறுபடியும் சிலர் அங்கு இடம்பெயர்ந்தது, ஆண்டுரீதியாக தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கையென மேலும் பல முக்கிய தகவல்கள் மேற்படி மலையக மாளிக்கைக்குள் இருக்கின்றன.
எனவே, கட்டாயும் சென்று பாருங்கள். ஒவ்வொருவரும் பார்த்து கற்றறிய வேண்டிய பல விடயங்கள் அங்கு இருக்கின்றன.
“ மண்வாசனை” எனும் தலைப்பின்கீழ் எம்மவர்களின் வாழ்க்கை முறைமை பற்றி நான் எழுதுகையில்தான் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவலும் எனக்கு கிடைத்தது.
உள்ளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றை புகைப்படமெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளால் வழங்கப்படும் விதிமுறைகளுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அங்குள்ள எந்தவொரு பொருளுக்கும் தேசம் விளைவிக்கவேண்டாம்.
சமூக அபிவிருத்தி நிறுவக ஊழியர்கள் மற்றும் எனது நண்பனான லோகேஸ் ஆகியோருக்கும் நன்றிகள். படங்கள் - சமூக அபிவிருத்தி நிறுவகம் இணையத்தளத்திருந்து பெறப்பட்டவையாகும்.

  • Like us
  • Comments
Item Reviewed: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம் Rating: 5 Reviewed By: pachai thangam